சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்..

By 
savukku7

சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் கோவை மத்திய  சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை வருகிற 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாகவும் சவுக்கு சங்கர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருச்சியில் பெண் போலீசார் கொடுத்த புகார், திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகார், மூத்த பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகார்கள்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கொடுத்த புகார் என மொத்தம் 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், சவுக்கு  சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறையில் அடைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை  மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்  உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை கோவை சிறை அதிகாரிகளிடம் சென்னை காவல்துறையினர் வழங்கினர்.

இதுகுறித்த சென்னை காவல்துறையின் செய்திக் குறிப்பில், சவுக்கு  சங்கர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மீதமுள்ள 2 வழக்குகள் விசாரணைக்கான நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவரது வீட்டில் இருந்து கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட்டுகள், அவரது கார் ஓட்டுநரின் வீட்டில் இருந்து கஞ்சா ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது கார் ஓட்டுநர் ராஜ ரத்தினமும் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தனது ஊடக பலத்தை பயன்படுத்தி சவுக்கு சங்கர் பல்வேறு நபர்களை மிரட்டி பணம் சம்பாத்தித்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story