கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்..

gambling

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை சேர்ந்த அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

'ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களை காப்பதற்காவது அதை தடை செய்யுங்கள்' என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த எதார்த்தமும், வலியும் கவர்னருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உரைக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கவர்னருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 

Share this story