கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை : முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

By 
stalin writter

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன் பதில்கள்" தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி: உங்களுடைய 70-வது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது?

பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததை விட பெரிய பரிசு இருக்க முடியுமா?

கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?

பதில்: 'தோள் கொடுப்பான் தோழன்' என்பதன் அடையாளம் அவர்கள்.

கேள்வி: கிராமப்புறப் பெற்றோர், மாணவ, மாணவியரிடம் "நான் முதல்வன்" திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: நன்றாக ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி இந்தத் திட்டம் தொடங்கபட்டதிலிருந்து இந்த ஆண்டு மார்ச் 1 வரை தமிழ்நாட்டில் உள்ள 1300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

கேள்வி: கவர்னர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே.

பதில்: இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

கேள்வி: டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது. பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர, விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது.

கேள்வி: வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்: தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. திரிபுராவில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்துவிட்ட காரணமாக காங்கிரஸ்-இடதுசாரிகள் அணி தோல்வியைத் தழுவி பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்துவிட்டார்கள். நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறார்கள். கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரிபுரா, நாகாலாந்து பற்றிப் பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவது இல்லை?

கேள்வி: கீழடி அருங்காட்சியகத்தை நீங்கள் திறந்து வைத்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் பிரமாண்டமாக இருக்கிறதே?

பதில்: நேரில் சென்று பாருங்கள், இன்னும் பிரமிப்பாக இருக்கும். இதே போல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது.

கேள்வி: நேற்று மகளிர் தினம். மகளிருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நிமிர்ந்த நன்னடை-நேர்கொண்ட பார்வை-நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிச்சல் கொண்டவர்களாக மகளிர் அனைவரும் உயர வேண்டும் என்பதே எனது எண்ணம். பெண்களுக்கு நான் சொல்வதைவிட, ஆண்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல நினைக்கிறேன். பெண்களைக் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும்-இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

கேள்வி: வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?

பதில்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள்.

வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது தான். பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும். இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.
 

Share this story