பத்திரிகை சுதந்திரம் பறிபோய் விட்டதா? : சமூக ஆர்வலர் அ.திருமலை விமர்சனம்

By 
erasai6

'வழக்கறிஞர்களுக்கு அது தொழில் என்றால், பத்திரிகையாளர்களுக்கு இது தானே தொழில்' என சமூக ஆர்வலர் கவிஞர் அ.திருமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் மொழியை வளர்ப்பதில் பேரறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் கருணாநிதி அவர்களும் தங்கள் வாழ்நாட்களையே தியாகம் செய்தவர்கள். 

அப்படிப்பட்ட தமிழறிஞர்கள் வழி வந்த திமுக ஆட்சியில், தமிழ் பத்திரிகையாளர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதும் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதும் தமிழ் மொழியை, தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்; வெட்கக்கேடானது; வேதனைக்குரியது.

ஆட்சி அதிகாரம் அவர்கள் கண்களை மறைத்து விட்டது. அதிகார மமதையில் அவர்களுக்கு இப்போது தெரியாமல், புரியாமல் இருக்கலாம்; அதற்கான நேரம் வரும்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

குற்றவாளியை நிரபராதியாக்க ஒரு வழக்கறிஞரும், குற்றவாளி செய்த குற்றத்தை நிரூபிக்க இன்னொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் வாதிடுகிறார்கள்; அவர்கள் யாரையாவது நம்மால் குறை சொல்ல முடியுமா?

அது அவர்களுக்கு நியாயம் என்றால், இங்கே சவுக்கு சங்கர் செய்திருப்பதும் நியாயம்தானே? ஸ்ரீமதி வழக்கில் பள்ளி நிர்வாகத்தைக் (குற்றவாளி) காப்பாற்ற பேசி இருக்கிறார்; இங்கே அரசு அலுவலர்கள் (குற்றவாளி) மீது குற்றத்தை நிரூபிக்கும் வகையில் பேசி இருக்கிறார்;.வழக்கறிஞர்கள் செய்வதை இங்கே பத்திரிகையாளராகச் செய்திருக்கிறார். 

வழக்கறிஞர்கள் செய்வது சரி என்றால், பத்திரிகையாளர்கள் செய்வதும் சரிதானே? பத்திரிகையாளர்களும் சட்டம் படித்து விட்டுத்தான் பேச வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது?

வழக்கறிஞர்களுக்கு அது தொழில் என்றால், பத்திரிகையாளர்களுக்கு இது தானே தொழில்? காலம் காலமாக ஊடகங்களும் பத்திரிக்கைகளும் இதைத் தானேசெய்து வருகின்றன; இங்கே தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்து வருவது யார்? இங்கே எல்லாமே பணம், பணம். பணம் பத்தும் செய்கிறது; பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

எனவே சவுக்கு சங்கர், பெலிக்ஸ் போன்ற பத்திரிக்கையாளர்கள் தவறு செய்திருந்தாலும் மறப்போம் மன்னிப்போம் என, எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என சமூக ஆர்வலர் அ.திருமலை தெரிவித்துள்ளார்.

Share this story