இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் : ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் தரப்பு விளாசல் 
 

By 
marudhu165

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :

'இந்திய விடுதலைக்கும் எடப்பாடிக்கும் என்ன சம்பந்தமோ, அந்த அளவிற்குதான் ஜல்லிக்கட்டு உரிமை மீட்டதில் எடப்பாடியின் பங்கு என்பதாகும்.

அதே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில், நேதாஜிக்கு எந்த அளவுக்கு பங்கு உண்டோ அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்ததில் பச்சைத்தமிழன் பன்னீர்செல்வத்துக்கு பங்கு உண்டு என்பதை போடி முதல் மோடி வரை நாடு அறியும்.

இன்னும் சொல்லப் போனால், புறநானூற்று தமிழினத்தின் பண்பாட்டு பெருமையான ஜல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டை மீட்டெடுத்து,

ஒன்பது வருடங்களாக பூட்டிக்கிடந்த வாடிவாசல்களின் கதவு திறந்து விட்டது ஓ.பி.எஸ் என்கிற மூன்றெழுத்து மந்திரம் என்பது மாடுகளுக்கு கூட தெரியும்.

ஆனால், ஜெயக்குமார் போன்ற பொலிகாளைக்கு புரியாது போனதில் ஆச்சரியம் இல்லை தான்.

எனவே, நாச்சியப்பன் பாத்திரக்கடையில் கோப்பையை வாங்கி அதில் எடப்பாடியின் பெயரை அச்சடிக்க குட்கா வியாபாரிகள் முயற்சிப்பது வெட்கக்கேடாகும்.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்., எடப்பாடியும் அவரது பணப்பண்னையில் தீனி போட்டு வளர்க்கப்படும் மனசாட்சியற்ற பிராணிகளும் கழகத் தொண்டர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் காலம் மலர்ந்தே தீரும்.

அன்பால் அன்றி, ஏழை எளிய தொண்டர்களை எவராலும் அபகரிக்க முடியாது என்பது எடப்பாடியின் ஏலக்கடைக்கு புரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எடப்பாடி திரட்டி வைத்திருக்கும் ஏகாதிபத்திய கும்பல் சாமானிய தொண்டர் கூட்டத்திடம் சரணடைந்தே தீரும்.

இதற்கு, மக்கள் திலகத்தின் ஆன்மாவும் மகராசி அம்மாவின் ஆசியும் ஓ.பி.எஸ்ஸுக்கும் அவரது உத்தம வழியில் நிற்கும் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும்  துணை நின்று வழி காட்டும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story