நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

By 
durga1

சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;

தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். இப்போது ‘சீவிடுவேன் சீவிடுவேன்’ என சொல்கிறார்களே, அப்படி யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல. நாங்கள் சொல்ல முடியாததை, தயங்குவதை உங்களால் சொல்ல முடியும். என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள் என்றார். 

மேலும் பேசிய அவர் அதிமுக, பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவும், பாஜகவும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது. ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற கூட்டத்தை எதிர்த்து நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் பாஜகவை போன்று போலியாக இருக்கக்கூடாது.

1000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. ரூ.5,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டது திமுக அரசுதான். கோயில்களை இடித்துவிட்டதாக பொய்யான படங்களை வெளியிட்டு பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர். பாஜகவினருக்கு தெரிந்த ஒரே யுனிவர்சிட்டி வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிதான்.

திராவிட இயக்கத்தை ஒழிப்பதாக கூறியவர்கள் கடைசியில் இங்கேதான் அடைக்கலமானார்கள். திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது. நெகட்டிவ் பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று ஃபோட்டோ எடுத்துவிட்டு இதோ பார்த்தீங்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். எனது மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு போவது அவரின் விருப்பம். தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா கோயிலுக்கும் தான் அவர்கள் செல்கிறார். அது அவரின் விருப்பம் அதை நான் தடுக்கவில்லை. தடுக்க தேவையில்லை.

நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல. கோவிலும், பக்தியும் அவரவர் விருப்பம். அவரவர் உரிமை துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது தொடர்பான பாஜக விமர்சத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

Share this story