செல்வப்பெருந்தகையிடம் சாவி கொத்தையே ஒப்படைத்துள்ளேன்: கே.எஸ்.அழகிரி..

By 
selva1

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவரையும் அரவணைத்து செயல்படவுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை முறைப்படி நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்றுக் கொண்டார். அதன்பின்னர், பிரம்மாண்ட விழா ஒன்றையும் அவர் நடத்தினார். அதில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், செல்வப்பெருந்தகையிடம் சாவி கொத்தை ஒப்படைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் தலைவராகும் போது ஒரு சாவியை கொடுத்து பொறுப்பை ஒப்படைத்தார்கள். இன்றைக்கு ஒரு பெரிய சாவி கொத்தையே அவரிடம் கொடுத்துள்ளேன். நான் அந்த சாவியை நான் தொட்டதே கிடையாது. நான் தேவையான அளவுக்கு மட்டுமல்ல; தேவைக்கு அதிகமாகவும் தலைவராக இருந்துவிட்டேன். ஒன்றை பெருவதில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளதோ; அதே மகிழ்ச்சி அதை துறப்பதிலும் உள்ளது.” என்றார்.

மேலும், “செல்வப்பெருந்தகை அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவார். நமது குறைகளை எப்போதும் வெளியில் சொல்லக்கூடாது. நமக்குள்ளேயே பேசித் தீர்க்க வேண்டும். பிரச்னைகளை வெளியில் சொல்வதால், மக்கள் காங்கிரஸ் கட்சியை தவறாக நினைக்கிறார்கள்.” எனவும் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. இதில், கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என பலர் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this story