என்னையும் 3 மாதங்களாக மிரட்டினார்கள்: சபாநாயகர் அப்பாவு பரபரப்பு தகவல்..

By 
appavu5

அரசு மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமலாக்கத்துறையிடம் இருந்து தனக்கு 3 மாதங்களாக மிரட்டல் வந்தது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை மத்திய அரசின் மனநிலையை புரிந்துகொண்டுள்ளார்கள்.

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுக்கு குறித்து நூல் விடுவார்கள். அதாவது உங்கள் மேல் பிரச்சனை இருக்கிறது.. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறார்கள். எனக்கு வேண்டிய ஆள் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தி வைத்துள்ளேன் என்று கூறுவார்கள்.

இந்த அமைப்புகளுக்கு இடைத்தரகர்கள் பலர் இருக்கிறார்கள். முதலில் அன்பாக பேசும் அவர்கள் பின்னர் மிரட்டல் விடுக்க தொடங்குவார்கள். பின்னர் மீண்டும் சமாதானமாக பேசி பேரம் பேசுவார்கள். சமாதானத்திற்கு உடன்படியவில்லை எனில் உடனே நோட்டீஸ் அனுப்புவார்கள். இதுபற்றி பலரும் என்னிடம் சொல்லி இருக்கின்றனர்.

என்னிடம் கூட சிலர் 3 மாதங்களாக பேசிக்கொண்டே வந்தனர். ஆனால் நான் காது கொடுத்து கேட்டதில்லை. ஆனால் என் மீது எந்த தவறும் இல்லை. விவசாயம் செய்து முன்னுக்கு வந்த என்னையே மிரட்டுறீங்களா என கேட்டேன். என்னை ஊரை விட்டு போக சொன்னார்கள். என் செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். என்னை போன்றே பலருக்கும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாபு என்ற அரசு மருத்துவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை கைவிட ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் 15 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு, இரவோடு இரவாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கித் திவாரி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார். லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார். ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

 

Share this story