கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன் : சீமான் ஆவேச பேச்சு

By 
pen4

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

இதையொட்டி பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 31-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் எழுப்பப்பட்டது. கூட்டத்தில் சீமான் பேசியதாவது, பேனா நினைவு சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். உங்கள் கூச்சலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.

மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம். பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு அல்ல, கடலில் வைக்கவே எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடலில் பேனாவை வைத்தால் ஒரு நாள் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார். இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீமான் அழைத்து செல்லப்பட்டார்.

Share this story