நீர்நிலைகளை நாம் ஆக்கிரமித்தால் தண்ணீருக்கு கோபம் வரும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

By 
durai3

சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சக்கரபாணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஏரியின் தன்மை, மதகுகளின் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்,

'நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் திறந்து விடும் காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரியில் கூட 8000 கன அடி வரை திறந்து விட்டோம். தற்போது 2500 கன அடியாக கொண்டு வந்திருக்கிறோம். கடலில் அதிகமாக அலை இருந்ததால் நீர் உள் வாங்கவில்லை. ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் அதிகப்படத்தப்படும்.

தண்ணீரை திறந்துவிடுவதை தவிர்த்து வேறு வழியில்லை. தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மழையை பார்த்து வருகிறோம். இந்த இலாகாவை 20 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இவ்வளவு பிரச்சினை எப்பொழுதும் ஏற்பட்டது கிடையாது. எனது வீடு, அலுவலகத்தில் எல்லாம் கடந்த முறை தண்ணீர் வந்துவிட்டது. ஆனால் இந்த முறை வரவில்லை.

ஏரியை பல ஆண்டுகள் தூர் வாராமல் விட்டு விட்டனர். டிரிபிள் ஆர் திட்டம் கொண்டு வந்து ஆழப்படுத்துகிறோம். நீர்வழி பாதையில் குறுக்கிட்டால் அதற்கு கோபம் வந்துவிடும். நீர்வழி பாதையை குறிக்கிடும் வேலையை யாரும் செய்யக்கூடாது. தடுப்பணைகள் கட்டுவதற்கு நில அமைப்பு வேண்டும். கொசஸ்தலை, ஆரணி ஆறு வரும் இரண்டு இடங்களை தேர்வு செய்தார்கள். கண்டிகை, ராமஞ்சேரி மக்கள் புரட்சி செய்து கட்டக்கூடாது என கூறிவிட்டனர். அதிமுக ஆட்சியில் ஆற்றுக்கு நடுவிலே கட்டி குட்டை போல் தேக்கி வைத்து விட்டனர். அதனால் எந்த பயனும் இல்லை.

ராமஞ்சேரி, திருத்தண்டலம் மக்கள் ஒத்துக்கொண்டால் தான் பிரமாண்டமான ஏரியை கட்ட முடியும். கட்டாய நில எடுப்பு செய்தாவது இந்த திட்டத்தை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றுவேன். வருமுன் காக்க வேண்டும் அதனை செய்வோம் என தெரிவித்தார்.

Share this story