உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

By 
I am going to celebrate with you Chief Minister Stalin's Pongal Greetings

அனைவருக்கும் தமிழர் திருநாள், பொங்கல் மகிழ்நாள், உழவர் உயிர்நாள், திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. 

உள்ளமெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. அந்த வகையில், நம் ஊனோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா அமைந்துள்ளது. 

தை முதல் நாள் தமிழர் திருநாள், தை இரண்டாம் நாள் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் நாள் என தைத்திங்கள் களின் தொடக்கம் என்பது தமிழர் பெருவிழா நாட்களாக அமைந்துள்ளது. 

புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புத்தரிசி படைத்து பொங்கலிடும் நாள் என்பது தமிழர்கள் இல்லமே பொங்கி வழியும் நாளாக அமைந்து வருகிறது. 

வேளாண்மையை தொழிலாக இல்லாமல், பண்பாடாக கடைப்பிடிக்கும் இனம் தமிழினம். 

மக்களையும் அவர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் செல்வங்களான மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும், அதனை கடைப்பிடித்து வருகிறோம். 

அந்த வகையில், எல்லாம் அடங்கிய திருநாள்தான் பொங்கல் திருநாள். அதிலும், இந்த ஆண்டு புத்தாட்சி மலர்ந்த ஆண்டாக அமைந்து இருப்பதால், மக்கள் மனதில் அரசியல் பூரிப்பும் இணைந்துள்ளது. 

உங்களில் ஒருவனாக, நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் அமர வைக்கப்பட்டு உள்ளேன். 

பொறுப்பேற்ற நொடியிலிருந்து உங்களுக்காகவே ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து வருகிறேன். மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே பெரும் பணி என உழைத்து வருகிறேன். 

8 மாதங்களில் ஏற்றமிகு திட்டங்களை தீட்டி வருகிறேன். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை சில மாதங்களில் செய்தவன் என்று நடுநிலையாளர்கள் பாராட்டை பெற்று வருகிறேன். 

இத்தகைய பொற்கால ஆட்சியின் முதல் தைத்திருநாளை உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன். 

கொரோனா காலம் என்பதால் கட்டுப்பாட்டுடன் நாம் இந்த விழாவை கொண்டாட வேண்டும். இல்லத்தில் இருந்தபடியே கொண்டாடுங்கள். பொதுஇடங்களில் கூட வேண்டாம். 

இந்த அலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். அதுவரை உங்களையும் காத்து, நாட்டையும் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

அனைவருக்கும் தமிழர் திருநாள்-தமிழர் இனநாள்-பொங்கல் மகிழ்நாள் -உழவர் உயிர்நாள் -திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என முதல்வர் தெரிவித்துள்ளார். 
*

Share this story