குமரி மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் : ஆய்வு..குறை கேட்பு..சீரமைப்புப் பணி..உத்தரவு..

In Kumari district, Chief Minister Stalin Inspection

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் கன்னியாகுமரி மாவட்ட நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து, இன்று நேரில் ஆய்வு செய்ய கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் 10 மணிக்கு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் தோவாளை பகுதிக்கு வந்தார். 

அங்கு மழையால் சேதமடைந்த பெரியகுளம் கால்வாய் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறை கேட்பு :

தோவாளையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மண்டபத்தில், மழை பாதிப்புக்கு ஆளான மக்கள் தங்கி இருந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

பின்னர், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து திருப்பதிசாரம், தேரேகால் புதூர் கால்வாய் கரை உடைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், இப்பகுதியில் மழையால் சாலையும் சேதமாகி இருந்தது. அதனைச் சீரமைக்கும் பணி குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளையும் பார்வையிட்டார்.

சீரமைப்புப் பணிகள் :

தோவாளை பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்பகல் குமாரகோவில் சென்றார். அங்கு பி.பி.கால்வாய் கரை உடைப்பை பார்வையிட்டார். அதன் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனை சீர் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, பெரிய கருப்பன், மனோ தங்கராஜ் மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட மழை சேதங்களை பார்வையிட்ட பின்னர், அவர் இங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறார்.
*

Share this story