ஓ.பன்னீர்செல்வம் அணியில், நடிகர் பாக்யராஜ் களம் இறங்குகிறார்?

k.bhagya

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தி.மு.க.வுக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளை பெற வேண்டும் என்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு நிறுத்தும் வேட்பாளரை விட அதிக செல்வாக்கு பெற்ற வேட்பாளரை களத்தில் இறக்க வேண்டும் என்று வியூகம் வகுத்து உள்ளனர்.

அதன்படி அவர்கள் கடந்த சில தினங்களாக நடிகர் பாக்யராஜை போட்டியிட வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நடிகர் பாக்யராஜ் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஈரோடு பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் அவரை களம் இறக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான இளங்கோவனுக்கு சவால் விடும் வகையில் வேட்பாளரை நிறுத்தி கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மும்முரமாக உள்ளனர். நடிகர் பாக்யராஜை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அணுகியதை அவருக்கு நெருக்கமானவர் இன்று உறுதிபடுத்தினார்.

ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் பாக்யராஜ் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வலுவான வேட்பாளரான இளங்கோவனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று பாக்யராஜ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

அதேசமயத்தில் அ.தி.மு.க.வின் அனைத்து தலைவர்களும் ஒன்றுபட்டு நின்றால் தேர்தலில் களம் இறங்க தயார் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் பாக்யராஜை சம்மதிக்க வைக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

என்றாலும் நடிகர் பாக்யராஜ் இடைத்தேர்தலில் களம் இறங்க தொடர்ந்து தயக்கத்துடன் உள்ளார். அவர் போட்டியிட திட்டவட்டமாக மறுத்தால் வேறு ஒருவரை தேர்வு செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தயாராகி வருகிறார்கள்.

Share this story