ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு, இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு..

By 
raisi

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, இந்தியாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசியக் கொடி தவறாமல் பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும், இந்தியா முழுவதும் தேசியக் கொடி நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், நாளைய தினம் அதிகாரபூர்வ கேளிக்கை நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் அதிபர் ரெய்சியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்ட இரங்கல் செய்தியில், "ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான துயர சம்பவத்தை அறிந்து காங்கிரஸ் கட்சி மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இந்தியா - ஈரான் உறவு என்பது பல நூற்றாண்டு கால அர்த்தமுள்ள விவாதங்களைக் கொண்டது. உயிரிழந்த ரெய்சியின் குடும்பத்தாருக்கு எங்கள் இதயப்பூர்வ இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில், ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story