எங்கள் நாட்டை, இந்திய பிரதமர் மோடி சரிசெய்ய வேண்டும் : பாகிஸ்தான் நபர் பிரார்த்தனை..

jana

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டு, பாகிஸ்தான் யூடியூபர் சனா அம்ஜத் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பத்திரிகையாளரான சனா அம்ஜத் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், 

'பாகிஸ்தான் இளைஞர் ஒருவர், தற்போது நாட்டில் நிலவும் விவகாரங்கள் குறித்து ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பேசுவதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை ஆட்சி செய்தால் நியாயமான விலையில் பொருட்களை வாங்கியிருக்க முடியும் என்று கூறுகிறார்.  

பிரதமர் மோடியையும் அவரது செயல்பாடுகளையும் வெகுவாகப் புகழ்ந்த அந்த பாகிஸ்தானியர், மோடி இருந்தால், நமக்கு நவாஸ் ஷெரீப் அல்லது பெனாசிர் அல்லது இம்ரான் தேவையில்லை என்றார். நாட்டில் உள்ள அனைத்து விஷம சக்திகளையும் அவரால் சமாளிக்க முடியும், இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, நாம் எங்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

"இஸ்லாமிய தேசம் கிடைத்தாலும் இங்கு இஸ்லாத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். மோடியின் ஆட்சியில் வாழ நான் தயார். மோடி ஒன்றும் மோசமான மனிதர் அல்ல. இந்தியர்களுக்கு பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

இரவில் உங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை வரும்போது, நீங்கள் பிறந்த நாட்டை அழிக்கத் தொடங்குகிறீர்கள். எனவே, மோடியை நமக்கு கொடுத்து, அவர் நம் நாட்டை ஆள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார் அந்த நபர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

Share this story