இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தை :  ரூ.5,200 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது

By 
India-Russia talks Rs 5,200 crore deal signed

பிரதமர் நரேந்திர மோடி-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
 
இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர் கேய் லால்ரோவ் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு நேற்று இரவே டெல்லி வந்தனர்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கையெழுத்து :

இந்த பேச்சு வார்த்தையின்போது, இந்தியா-ரஷ்யா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ரஷ்ய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வாங்க ஒப்பந்தமிடப்பட்டது. 6 லட்சத்து ஆயிரத்து 427 ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.

2031 வரை 10 ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஏ.கே.203 துப்பாக்கி :

ஏ.கே. 203 ரக துப்பாக்கியை வாங்குவதன் மூலம், இந்திய ராணுவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் இந்திய சிறு ஆயுதங்கள் தொகுப்பு விடைபெறவுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கவுள்ள ஏ.கே.203 ரக துப்பாக்கி வாயு மூலம் இயங்கக்கூடியது. 

முந்தைய கேட்ரிட்ஜை விட, அதாவது துப்பாக்கி தோட்டாக்களில் இருக்கும் வெடி மருந்துகள் இதில் அதிகமாக இருக்கும். 

ஆயுத வல்லுநர்கள் :

ஏ.கே. 203 ரக துப்பாக்கி ஆரம்பத்தில் ஏ.கே.103எம் என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் அதனை ரஷ்ய விஞ்ஞானி மிக்கெயில் கலாஷ்நிக்கோவ் மேம்படுத்தினார். ஆயுத வல்லுநர்களை பொறுத்தவரை ரஷ்யாவின் இந்த தயாரிப்பு மிகவும் நம்பகமானது. 

நீடித்து நிலைக்க கூடியது. பராமரிப்பதும் எளிதானது. அதன் வடிவமைப்பு, தோட்டா பாயும் திறன், துல்லியம் என அனைத்திலும் சிறப்பானதாக இருப்பதாகவும் புகழ்கிறார்கள் ஆயுத வல்லுநர்கள்.
*

Share this story