பாஜக கட்சியில் இணைந்தது உண்மையா? மோடியை சந்தித்து அர்ஜுன் வைத்த கோரிக்கை..

By 
arjun5

பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் சந்தித்து பேசிய நிலையில், அவர் பாஜக கட்சியில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து அவரே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

பாரத பிரதமர் மோடி, 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 'கோலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் முக ஸ்டாலில் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி துவங்கி வைத்த பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிரதமரை நட்பு ரீதியாகவும், மரியாதை ரீதியாகவும் சந்தித்து பேசினர். அந்த வகையில், மோடியை சந்திக்க பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அனுமதி கேட்ட நிலையில், மோடி அனுமதி கொடுத்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

நடிகர் அர்ஜுன் திடீர் என பிரதமரை சந்தித்து பேசியதை தொடர்ந்து... அர்ஜுன் பாஜக கட்சியில் இணைந்து விட்டதாக செய்திகள் பரவின. இதை தொடர்ந்து பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன், இதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் , பிரதமரை என்னுடைய கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். இது சும்மா கேஷுவலாக நடந்த சந்திப்பு தான். இப்போது தான், முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன்.

எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார். இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம்." என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, "பா.ஜ.க கட்சியில் நீங்கள் இணைந்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறதே... அது உண்மையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன், 'அப்படியெல்லாம் இல்லை... அரசியல் எனக்கு தெரியாது" என்று கூறி இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதை உறுதி செய்தார்.

Share this story