முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா நிதிஷ் குமார்? மோடி, அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு..

By 
nitish1

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில், பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நாளை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை திடீரென சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமார் இணையப்போவதாகவும், அவருக்கு முக்கிய துறை ஒன்று ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தால், பாஜகவை சேர்ந்த ஒருவர் பீகார் முதல்வராக வாய்ப்புள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் களத்தை முழுவதுமாக மாற்ற வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பீகாரின் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். அம்மாநிலத்தில் ஆளும் கூட்டணி சவால் விடும் வகையில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி வளர்சியடைந்து வருவதற்கு இடையே, ஐக்கிய ஜனதாதளத்தின் செல்வாக்கு பீகாரில் சமீப காலமாக குறைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இருந்த போதிலும், நிதிஷ் குமார் தலைமையிலான இந்தக் கட்சி பீகாரில் முக்கிய அரசியல் சக்தியாக உள்ளது. இதன் காரணமாகவே அக்கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார், திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து மக்களவைத் தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

பீகாரில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நிதிஷ்குமார் முதல்வராக  இருந்து வருகிறார். இடையில் 2014-15இல் மட்டும்  ஓராண்டுக்கு ஜிதன் ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். பீகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மெகா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியபோதும், கூட்டணியில் இருந்த கட்சிகள் மிகவும் சொற்பமான இடங்களை பெற்றதால் தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பு நூலிழையில் தவறியது.

இதையடுத்து, ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வரானார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், பாஜகவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதும்கூட, நிதிஷ்குமார் முதல்வரானார். தொடர்ந்து, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால், ஆர்ஜேடியுடன் கூட்டணி  அமைத்த நிதிஷ்குமார், அம்மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்தார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார். ஆனால், திடீரென ஆர்ஜேடியுடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். இதேபோல், 2015-17 காலகட்டத்திலும் ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்து பின்னர் அதிலிருந்து நிதிஷ்குமார் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story