அமைச்சர் பதவியை இழக்கப்போகிறாரா பொன்முடி.? நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் திமுக

By 
ponmudi4

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், நாளை மறுதினம் தண்டனை விவரங்கள் தொடர்பாக தீர்ப்பு அளிக்கவுள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் பொன்முடி அமைச்சர் பதவியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லையென கூறி வழக்கில் இருந்து இரண்டு பேரையும் விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதால் அமைச்சர் பொன்முடியை  விடுதலை செய்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். 

மேலும் நாளை மறுதினம் தண்டனை விவரங்களை அளிக்கவுள்ளதால் (21 ஆம் தேதி) அன்றைய தினம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த நிலையில், நாளை மறுதினம் வழங்கவுள்ள தீர்ப்பை பொறுத்து பொன்முடி அமைச்சர் பதவியில் தொடர்வாரா அல்லது பதவி இழப்பாரா என தெரியவரும்.

எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்றால் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும். எனவே அந்த வகையில் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஒரு வருட காலத்திற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் எம்எல்ஏ பதவி இழக்க நேரிடாது. எனவே தண்டனை விவரங்களை திமுகவினர் எதிர்நோக்கியுள்ளனர்.

Share this story