கமல் கட்சியில் இருந்து விலகல்; வெளியேறிய 1 மணி நேரத்தில் பாஜகவில் இணைந்த மாநில செயலாளர்..

By 
anusa

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அதிரடியான பல சம்பவங்கள் அரசியல் களத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை நாம் அனுதினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் கூட மக்களவைத் தொகுதி எதுவும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை, மாறாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்று ஒதுக்கப்பட்டும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவரது கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் எழத் துவங்கியது. இந்த சூழலில் கோவையை சேர்ந்த பார்க் கல்வி குழுமங்களில் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான அனுஷா ரவி மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி உள்ளார். 

அக்கட்சியில் பரப்புரை பிரிவு மாநில செயலாளராக அவர் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், கமலஹாசன் எடுத்த முடிவு காரணமாக அதிருப்தி அடைந்தார் என்று கூறப்பட்டது. மேலும் இன்று அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். 

அதில் மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடைய மக்கள் நீதி மய்யம் உறவுகளுடன் இணைந்து பயணிக்க அனுமதித்தது, கட்சி பொறுப்புகளில் வழங்கியமைக்கு நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புகளை, உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக பயன்படுத்தி உங்கள் பாராட்டுகளை பெற்றதில் மகிழ்ச்சி. ஆனால் வருகிற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காதது எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாக" கூறி கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார். 

இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவர் பாஜகவில் தற்பொழுது இணைந்திருக்கிறார். பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை முன்னிலையில் அவர் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். இந்த செய்தி கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.

Share this story