டெல்லியில் எடுபடாத கெஜ்ரிவால் அனுதாப அலை.! - 7 தொகுதிகளையும் கைப்பற்றும் பாஜக

By 
delhinews

தலைநகர் டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி இருப்பது பாஜகவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றாக போட்டியிட்டும் பலன் இல்லாமல் போயிருக்கிறது.

ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். வடகிழக்கு டெல்லியில் பாஜகவின் மனோஜ் திவாரி 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திவாரிக்கு எதிராக காங்கிரஸின் கன்னய்யா குமார் போட்டியிடுவதால் இந்த் தொகுதி சிறப்பாகக் கவனிக்கப்படுகிறது.

சாந்தினி சௌக் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஜெய் பிரகாஷ் அகர்வால், பிரவீன் கண்டேல்வாலுக்கு கடும் போட்டி அளித்து வருகிறார். சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி டெல்லியில் பாஜக 54%, ஆம் ஆத்மி 26% மற்றும் காங்கிரஸ் 17% வாக்குகள் பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) காங்கிரஸும் இணைந்து பாஜகவுக்கு சவால் விட்டாலும், டெல்லி மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றொரு வெற்றிக்கு தயாராகிவிட்டது. தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டைப் போலவே இருக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின. பாஜக 50% முதல் 56% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டது.

புதுமுகத்தின் வெற்றிமுகம்:

புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பன்சூரி ஸ்வராஜ் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பார்தியைவிட 31,594 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். மறைந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாஜகவின் டாக்டர் மகேஷ் சர்மா கவுதம் புத் நகரில் 3,01,122 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 2019 தேர்தலில், பாஜகவின் மகேஷ் ஷர்மா பகுஜன் சமாஜ் கட்சியின் சத்வீர் நாகரை கிட்டத்தட்ட நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் நரேந்திர பதியை எதிர்த்து கிட்டத்தட்ட மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குர்கானில் சில மணி நேரங்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் ராஜ் பப்பர் நல்ல வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். தற்போது பாஜகவின் ராவ் இந்தர்ஜித் சிங் 1,105 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்துவிட்டார்.

எடுபடாத கெஜ்ரிவால் அனுபதாப அலை:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக சிறப்பு அனுமதி பெற்ற வெளியே வந்த அவர், டெல்லி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கும் உத்வேகம் கொடுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததால் அவர் மீதான அனுதாப அலை ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது.

தலைநகர் டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி இருப்பது பாஜகவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றாக போட்டியிட்டும் பலன் இல்லாமல் போயிருக்கிறது.

டெல்லிக்கு அருகே இருக்கும் சண்டிகரில் மேயர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டு, பாஜகவுக்கு சாதகமாக முடிவை அறிவித்தார். அப்பட்டமான இந்த மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவமும் பாஜகவுக்கு பதாகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க பாஜக பக்கம் சென்றிருக்கிறது.

Share this story