திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து, கே.எஸ்.அழகிரி கருத்து..

By 
ksa

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

2024ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தொகுதிப் பங்கீடு குழு சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றனர். 

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முகுல் வாஸ்னிக், "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது. திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது" என்றார். "ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து மக்களின் நம்பிக்கையை பெறுவது குறித்து விவாதித்தோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்து ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வியூகங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தினோம்" எனவும் குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது" என்று கூறினார். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பன குறித்து பேசியதாகவும் திமுகவிடம் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவுக்கு எதிராக கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், திமுக இடையேயான இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிக கவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டுக்கு முன்வரவில்லை. பீகாரிலும் நிதிஷ் குமார் பாஜகவின் கூட்டணிக்குத் தாவியுள்ளார். இதனால், இச்சூழலில் திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

Share this story