ஜே.பி.நட்டாவுடன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் சந்திப்பு

By 
Jepinatta at the meeting with the Federal Minister in charge elmurukan

நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு, முதல் முறையாக நேற்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

புதிய அமைச்சர்கள் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி முன்னிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
7 பெண்கள் உள்பட, 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இதில், தமிழ்நாட்டுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் அமைச்சரானார். 

இலாகாக்கள் :

ஏற்கனவே மத்திய  அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஆனாலும், அவர்கள் இருவருமே தமிழகத்தில் வசிக்கவில்லை.

ஆனால், எல்.முருகன் தமிழகத்தில் வசித்து வருகிறார். இதன்மூலம் தமிழகத்துக்கு அமைச்சர் பதவி கிடைத்து இருக்கிறது. எல்.முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், பால்வளம், கால்நடை துறை இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் இன்று பகலில் டெல்லி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆலோசனை :

இன்று காலை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புதிய மந்திரிகள் அனைவரையும் அழைத்து பேசினார். இதில் எல்.முருகன் பங்கேற்றார்.

அப்போது புதிய அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஜே.பி.நட்டா ஆலோசனைகளை வழங்கினார்.

இதன் பின்னர், எல்.முருகன் டெல்லியில் கட்சியின் பல்வேறு தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

மேல்சபை எம்.பி :

எல்.முருகன் தற்போது எம்.பி.யாக இல்லை. எம்.பி. பதவியில் இல்லாமல், மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் 6 மாதத்தில் எம்.பி.யாக வேண்டும்.

எனவே, ஏதாவது ஒரு மாநிலத்தில் அவர் மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story