தலைமையா மடமையா? : ஓபிஎஸ் தரப்பு அதிரடி கேள்வி  

marudhu169

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

கருப்பும் சிவப்பும் :

மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் 'ஒரு சிவப்பு விஜயபாஸ்கர்' செந்தில் பாலாஜி.- 'ஒரு கருப்பு செந்தில் பாலாஜி' விஜயபாஸ்கர்.

இவ்விருவருக்கும் ஓட்டுப் போடுவதே ஒரு வகையில் தேசவிரோதம் தான்.காரணம், மக்கள் நல்வாழ்வு துறையை கையில் வைத்துக் கொண்டு குட்கா விற்ற குற்றவாளி விஜயபாஸ்கர் என்றால்..

மதுவை கொண்டு மக்களை சுரண்டும் இன்னொரு மனசாட்சி இல்லாத மந்திரி செந்தில் பாலாஜி. இவர்கள் போன்றோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தால் மட்டுமே பொதுவாழ்வில் நேர்மையான மனிதர்களை ஊக்குவிக்க முடியும்.

என்னாகும் எதிர்காலம்? : 

அன்று..அமித்ஷா தொடங்கி ஓ.பி.எஸ்.வரை எடுத்துச்சொன்ன அறிவுரைகளை ஏற்காத எடப்பாடியின் ஆணவம்தான்.. அழியும் நிலையில் இருந்த தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியது.

அதே எடப்பாடியின் மூளைகெட்ட மூர்க்கத்தனம்தான், ஆட்சியில் இருக்க வேண்டிய அண்ணா திமுக வை இன்று அழித்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில், மக்கள் திலகம் எம்ஜிஆர் முகவுரை எழுதிய சரித்திரப் பேரியியக்கத்திற்கு, எடப்பாடி என்கிற 'பதவிப்பித்துப்பைத்தியம்' முடிவுரை எழுதிட அலைகிறது.

இதற்கு மேலும் தொண்டர்கள் பொறுமை காத்தால், கழகத்தின் எதிர்காலம் கல்லறைக்கு போவதை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

ஆம்., ஊரைத் திரட்டி தேரை இழுப்பது தலைமைத்துவம். தனி ஒருவர் தாகத்துக்கு ஊருணியையே உடமையாக்குவது மடமைத்தனம். எடப்பாடிக்கு புரிய வைங்கப்பா..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story