பேச்சை குறைத்து, செயலில் திறமையை காட்டுவோம் : முதல்வர் ஸ்டாலின் உரை

By 
Let's cut to the chase and show active talent Chief Stalin's speech

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக, இன்று கோவை சென்றார். அங்கு அவர், பல்வேறு அரசு துறைகள் சார்பில், ரூ.587.91 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 

தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில், கோவை மாவட்டத்தில் ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அந்த பணிகளையும் தொடங்கி வைத்தார். 

தொழில் வளர்ச்சி :

மேலும், பல அரசு துறைகளின் சார்பில் ரூ.646.61 கோடியில் 25,123 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.

கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக ரூ.1324.25 கோடியில் புதிய நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : 

'லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கேன்' என்ற நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். 

கோவை விமான விரிவாக்க திட்டத்துக்கு ரூ. 1132 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது; விரைவில், நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும். சென்னை போல கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர, அரசு முடிவு செய்துள்ளது. தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். 

கோவை முதலீட்டாளர் மாநாட்டில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.

மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில் ரூ.332 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்படும். 

என் மக்கள் தான் :

மாவட்ட மக்களின் கூடுதல் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி செலவில் நலவாழ்வு மையங்கள் துவங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டும்.

சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது. ஆனால், கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை. அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுகிறேன். 

நான் வாக்களித்தவர்களுக்கு மட்டும் பணியாற்றுவதில்லை. 
வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுகிறேன். அப்படிதான் அண்ணா, கலைஞர் எங்களை வளர்த்திருக்கிறார்கள். கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அரசின் பணிகளை கவனிக்க செந்தில் பாலாஜியை நியமித்தேன்.

செயலில் காட்டு :

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களிடம் வாங்கிய மனுக்களுக்கு தீர்வு கண்டேன். ஸ்டாலினால் பெட்டியை திறக்க முடியாது, ஏமாற்றுகிறார் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால், மனுக்களுக்கு நான் தீர்வு கண்டு வருவதை மக்கள் பெருமையாக பேசுகிறார்கள்.

நான் எப்போதும் அதிகமாக பேச மாட்டேன், செயலில் என்னுடைய பணி இருக்கும்; பேச்சை குறைத்து, செயலில் உன்னுடைய திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப செயலாற்றுவோம்.
*

Share this story