திமுக.வை வீழ்த்திக் காட்டுவோம் : டிடிவி.தினகரன் பரபரப்பு பேச்சு

ttv4

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. 

விழாவில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்குள்ள 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சி விழாவில் டி.டி.வி தினகரன் பேசியதாவது:- 

நமது கட்சியின் 6-வது ஆண்டு தொடக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும் உண்மையான அம்மாவின் வாரிசுகளாக உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

மார்ச் 15-ல் வேலூர் பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பீரமான கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அம்மா முன்னேற்ற கழகம் பிறந்தநாள். கடந்த 5 ஆண்டுகளில் நாம் எத்தனையோ சோதனைகளை சந்தித்து உள்ளோம். 

அம்மாவின் பிள்ளைகள் நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள். ஒரு சிறு தொய்வு, தயக்கமின்றி நம்மால் இந்த இயக்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். 

அம்மாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்ற கடமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு இருக்கிறது. 

தொண்டர்களில் ஒருவனாக என்னை இன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். 

வருங்காலத்தில் அம்மாவின் லட்சியங்களை நமது சந்ததிகளுக்கு கொண்டு செல்லக்கூடிய இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்கும். 

காரணம், இங்கு உள்ள தொண்டர்கள் உண்மையான தொண்டர்கள். டெண்டர்களுக்காக வந்தவர்கள் அல்ல டெண்டர்களுக்காக வந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் வேறு கட்சிக்கு செல்லுபவர்கள் தொண்டர்கள் அல்ல. 

டெண்டர்கள் கிடைக்கும் என்று அங்கே சென்று இருக்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்கள். 

அவர்கள் உண்மையான அம்மாவின் தொண்டர்கள் அல்ல. ஆட்சி அதிகாரம் எதிரிகளின் கையில் இருந்தாலும், அதையெல்லாம் வேண்டாம் என்று ஆட்சி அதிகாரத்தின் லாபங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து இங்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். 

வீரத்தோடும், தீரத்தோடும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பின்னடைவும் இந்த இயக்கத்தை பாதிக்கப்படவில்லை. 

காரணம், இது ஏதோ சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. இது அம்மா என்ற மூன்றெழுத்தின் லட்சியங்களை தொடர்ந்து கொண்டு செல்கின்ற இயக்கம். பல லட்சம் தொண்டர்கள் என்னோடு அணிவகுத்து இருக்கிறீர்கள். நமது இயக்கத்திற்காக பாடுபட்டு வருகிறார்கள். 

தமிழகத்தில் அமைப்பு ரீதியாக 5 ஆண்டுகளில் இந்த இயக்கம் எல்லா பகுதிகளிலும் வேரூன்றி இருக்கிறது. 

வருங்காலத்திலே இது அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் இயக்கமாக வளர்ந்து வரும். புரட்சித் தலைவர் ஆரம்பித்த இயக்கம் இன்று துரோகிகளின் கையிலே சிக்கிக் கொண்டுள்ளது. 

ஆட்சி அதிகாரம், பண பலத்தால் இன்றைக்கு மின்மினி பூச்சிகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக ஆணவத்தின், அகங்காரத்தின் உச்சமாக திகழ்கிறார்கள். 

அம்மாவின் ஆட்சியை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை . பண பலத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்றார்கள். முடியாது என்று காலம் அவர்களுக்கு உணர்த்தி இருக்கிறது. 

ஆனால் தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களது சுயநலமும், அதிகாரம், ஆணவம் இதற்கு காரணம். 

வருங்காலத்தில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திமுகவை வீழ்த்தி காட்டுவோம் என்கின்ற உறுதியினை ஏற்போம். 

இந்த இயக்கம் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் அம்மாவின் இயக்கம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
*

Share this story