ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்..! எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் வீடியோ..

By 
epse1

"வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன், உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். முன்னதாக இன்று காலை சேலத்தில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அந்தப் பகுதியில் நடந்துசென்று வாக்கு சேகரித்தார். இந்நிலையில், தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "அன்பார்ந்த தமிழக வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பே, அதிமுகவின் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களது பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில், இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்துள்ளோம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகை ரூ.3000 வழங்க வேண்டும். வருடத்துக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வு, மேக்கேதாட்டு, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன், உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாடு காப்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்று அதில் பேசியுள்ளார்.

Share this story