மலையும், முரண்பாடு நிலையும் : பாஜக மீது மருது அழகுராஜ் கடும் தாக்கு

By 
marudhu197

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

* மூன்று சதவீத கட்சி ஒன்று, முப்பது சதவீத கட்சியை மூன்று சுக்காக பிளக்க வைத்து.. அந்த மூன்று பிரிவுகளும் தங்களிடம் தனித்தனியாக வந்து நின்று.. 

பல்லக்கில் வைத்து தங்களை தூக்க வேண்டும் என அந்த மூன்று சதவீதம் ஆசைப்படுகிறது என்றால்.. அவர்களை முட்டுச்சந்தில் நிறுத்தி தழும்பு விழும் அளவுக்கு தலையில் குட்டு வைத்து அனுப்ப வேண்டியது..

மோடியா லேடியா என்று சவால் விட்ட வீரத்திருமகளின் பாதத்தடத்தில் நடக்கும் கழகச் சிப்பாய்களின் கடமை அல்லவா.

* அன்று வைகோவின் நடைபயணம் ம.தி.மு.க. வை வளர்த்திருக்குமானால்.. அதேபோல், குமரி அனந்தனின் நடைபயணம் அன்று காங்கிரஸை வளர்த்திருக்குமானால் ..

 இன்றைய அண்ணாமலையின் நடைப்பயணம் பா.ஜ.க . வை வளர்க்கும் என நாமும் நம்பலாம்.

* திராவிட கூட்டத்தை ஓழிக்க வேண்டும் என்று கொந்தளிக்கிற பா.ஜ.க.வும் அதன் தமிழக  தலைவர் அண்ணாமலையும்..

அண்ணா. "திராவிட" முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு "திராவிட" கழகம் என திராவிடக் கட்சிகளின் தயவு தேடி அலைவது எதற்காக?

மேலும்.. தமிழகத்தை ஐம்பது வருடங்களாக திராவிடக் கட்சிகள் சூறையாடி விட்டதாக குற்றம் சுமத்தும் பா.ஜ.க. .. அந்த ஐம்பது வருடங்களில் சுமார் முப்பது வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்திருப்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லவா.

அப்படி என்றால் தமக்கென வாழாத புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அரசியலையும் திராவிட சூறையாடல் என்கிறதா பா.ஜ.க?

அதுதான் பா.ஜ.க. வின் நிலைப்பாடு என்றால், அந்த திராவிட கட்சியுடனான கூட்டணிக்கு அலையும் பா.ஜ.க.வின் நிலைமை பரிதாபம் அல்லவா..

திருடன் என்று பழிபோட்டு விட்டு, அந்த திருடனின் கையிருப்பில் பங்கு கேட்டு  கையேந்துவதுபோல் அல்லவா இருக்கிறது பா.ஜ.க. வின் தமிழ்நாட்டு அரசியல்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story