மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு..

By 
Megha Dadu Dam issue Duraimurugan meets Union Minister

கர்நாடகாவுடன் காவிரி, தென்பெண்ணை ஆறுகள், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகள் தீர்வே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் நீரை கர்நாடகம் திறந்துவிடுவதில்லை.

தமிழக அரசு எதிர்ப்பு :

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, எரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணையை கட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.

அதில், நீர் மின் நிலையத்துடன் கூடிய மேகதாது அணையை, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நீர் மின் நிலையங்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

வலியுறுத்தல் :

தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது, மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்த உள்ளார். 

தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில், கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிக்க உள்ள துரைமுருகன், நடுவர் மன்றம் அமைக்கவும் கோரிக்கை வைக்க உள்ளார்.

இதுதவிர, முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் மத்திய அமைச்சருடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது. மேலும், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவையும் மத்திய அமைச்சரிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story