குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல் குறித்து, அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்..
 

mf

திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நியமித்தார். அவர் உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றியை தேடி தந்தவர். அவர் தான் முழு வெற்றிக்கு காரணம். கடுமையான உழைப்பாளி.

மணமக்களுக்கு தாலி, பட்டு வேட்டி, சேலை உள்பட சீர்வரிசை பொருட்களை பார்த்து பார்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ளார். இங்கு நடந்தது சுயமரியாதை திருமணம். அந்த காலத்தில் இந்த மாதிரியான சுயமரியாதை திருமணத்தை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியவர் பெரியார். முன் மொழிந்தவர் அண்ணா. அதனால் தான் தொடர்ந்து கலைஞரும், முதலமைச்சரும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை. மணமக்கள் அ.தி.மு.க, பா.ஜ.க போல் இருக்காதீர்கள். யாருடைய காலிலும் விழாதீர்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும். தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம். ஆனால் எப்போதும் உங்கள் உரிமையை மட்டும் விட்டு கொடுக்காதீர்கள்.

இங்கு வந்துள்ள மணமக்களுக்கும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன். உங்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளுக்கு நீங்கள் சுத்தமான தமிழ் பெயர்கள் வையுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக இந்தி மொழியை கொண்டு வருகிறார்கள். தற்போது என்ன பெயர் வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சிலர் வாயில் நுழைய முடியாத அளவுக்கு பெயர்களை வைக்கிறார்கள். எனவே சுத்தமான தமிழ் பெயர் வையுங்கள்.

வீட்டில் அனைவரும் அரசியல் பேச வேண்டும். தமிழ்நாட்டில், முதலமைச்சர் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசு என்ன செய்கிறது? தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, 5 லட்சம் கோடி கடனை முந்தைய அரசுவிட்டு சென்றது. அதனை திறம்பட கையாண்டு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். எனவே வீட்டில் அரசியல் பேசுங்கள், அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.கவினர் தேர்தல் வரும்போது தான் வெளியே வருவார்கள். தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடுவார்கள். தற்போது இடைத்தேர்தலுக்கு வந்தார்கள். இனி அடுத்த 8 மாதங்களுக்கு வர மாட்டார்கள். மீண்டும் பாராளுமன்ற தேர்தலின் போது தான் வருவார்கள். ஆனால் நாங்கள் தேர்தல் நடைபெறாத நேரத்தில் கூட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களோடு இருந்து மக்களுக்காக பணி செய்வோம். எனவே நீங்கள் இந்த அரசுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Share this story