ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது குறித்து, மு.க.ஸ்டாலின் காட்டம்..

By 
hemant2

நில மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்தநிலையில் நேற்று சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். 

இந்தநிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜார்க்கண்ட் முதலமைச்சர் மாண்புமிகு ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர் மீது இப்படி விசாரணை அமைப்புகளை ஏவியிருப்பது அரசியலில் மற்றுமொரு தரந்தாழ்ந்த வீழ்ச்சி. பா.ஜ.க.வின் பதற்றத்தையும் அதிகார அத்துமீறலையுமே இது காட்டுகிறது.

இத்தகைய அசிங்கமான அரசியலால் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கிட முடியாது. பா.ஜ.க.வின் காழ்ப்புணர்ச்சி அரசியலை உறுதியுடன் எதிர்கொண்டு, அவர்களுக்கு அடிபணிய மறுத்துள்ளார் திரு. ஹேமந்த் சோரன் அவர்கள். சோதனைகளில் துவளாமல், பா.ஜ.க.வின் மிரட்டல் உத்திகளுக்கு எதிராக அவர் காட்டியுள்ள இந்த நெஞ்சுரம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this story