மு.க.ஸ்டாலினின் இன்ப சுற்றுலா : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

By 
traveli

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மா ஆட்சியிலும், அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் புரட்சித் தலைவி 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி 2.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறை சார்பாக 16,532 கோடி ரூபாய் மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன.

எங்கள் ஆட்சியின் இறுதியில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 44 திட்டங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கிவிட்டன. 27 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருந்தன. எங்கள் ஆட்சியின் இறுதியில் சுமார் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோரை அழைத்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, 60,674 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களைத்தான் கடந்த இரண்டு வருடங்களாக, இன்றுவரை தி.மு.க. அரசு தாங்கள் செய்ததாகக் கூறி வருகிறது. புதிதாக எந்தஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் இந்த ஆட்சியில் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுமக்களுக்கு பணப்பலன் அளிக்கக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார்.

இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட தி.மு.க. அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 

Share this story