எம்.பி. பதவியை மீண்டும் பெற, 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் அப்பீல்..

rahul444

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்தியின் தண்டனை காலம் 1 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் கூறுகையில், 

"நடப்பு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்கக் கூடாது என்று மத்திய அரசு திட்டமிட்டு சதி செய்து அவரை வேண்டுமென்றே தகுதி நீக்கம் செய்துள்ளது. இது முற்றிலும் பொய்யான வழக்கு. 

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம்" என்றார். 

இந்த நிலையில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதன்பேரில், சூரத் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட உள்ள அப்பீல் மனு காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. 

சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதன்மூலம் எம்.பி. பதவியை மீண்டும் பெற ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.
*

Share this story