நயினார் நாகேந்திரனுக்கு அடுத்தடுத்து சிக்கல்.! அதிரடியாக வழக்கு பதிவு செய்த தேர்தல் அதிகாரி - காரணம் என்ன.?

By 
nynar

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக வெளுத்து வாங்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருக்கின்றனர். காலை 6 மணிக்கு தொடங்குகின்ற பிரச்சாரம் இரவு 10 மணி கடந்தும் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையின் சார்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த 20 தினங்களுக்கு மேலாக தனக்கு வாக்கு சேகரித்து நெல்லை முழுவதும் சுற்றி சுற்றி வருகிறார். பாஜக அரசின் திட்டங்களையும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்தும், திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளையும்  வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்தும் வாக்கு கேட்டு வருகிறார். 

இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி தினேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 25 பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் சென்னையில் உள்ள ஹோட்டலில் இருந்து நெல்லைக்கு 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து பறக்கும் படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அலுவலகத்தில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ள நிலையில்,  தற்போது இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதாக நயினார் நாகேந்திரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளது

Share this story