நெல்லை காங். நிர்வாகி கொலை வழக்கில் புதிய தடயம் சிக்கியது..

By 
njk3

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கில் தீவிர விசாரணை நடத்திவரும் போலீசார், கொலை நடந்த இடத்தில் எரிந்த நிலையில் கிடைந்த டார்ச் லைட் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 4ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் புலனாய்வு நிபுணர்கள் மதுரை, கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சனிக்கிழமை ஜெயக்குமார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து பழைய கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று கிடைத்துள்ளது.

ஜெயக்குமார் சென்ற மே 2ஆம் தேதி திசையன்விளையில் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கடைக்குச் சென்று டார்ச் லைட் வாங்கியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஏற்கெனவே தெரியவந்தது. எனவே, தற்போது கிடைத்துள்ள டார்ச் லைட், அன்று ஜெயக்குமார் வாங்கியதுதானா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Share this story