நேதாஜியே தேசத்தந்தை: ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு 

By 
netaji

நேதாஜியே தேசத்தந்தை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' அதாவது தேசிய வல்லமை தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறிய பிறகு, சுதந்திரப் போராட்ட வீரர்களை மறந்துவிட்டோம். ஆனாலும், அவர்கள் நம் டி.என்.ஏவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத்தில் இருந்த வீரர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சி போன்றோர் இங்கு கொண்டாடப்படுகிறார்கள்.

ஆனால், இந்த மண்ணிலிருந்து பலர் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். நேதாஜியுடன் இணைந்து போராடியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நேதாஜி கொண்டாடப்படவேண்டியவர் என்று எதிர்பார்ப்பது இயல்பானதுதான். ஆனால், உண்மை என்னவென்றால் குறிப்பிடத்தக்க அளவுக்கு நேதாஜி போற்றப்படவில்லை.” என்றார்.

நேதாஜி இல்லை என்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது என்று தெரிவித்த ஆளுநர் ரவி, “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் வரலாற்றை பாருங்கள். 1942ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த போராட்டத்தை நடத்தவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களுக்காகப் போராடிக்கொண்டிருந்தார்கள். முகமது ஜின்னா தலைமையில், முஸ்லிம் லீக் தனி நாடு கேட்டுக் கொண்டிருந்தது. இஸ்லாமிய  தலைவர்களின் எண்ணப்படி நாடு இரண்டாக பிரிந்தது.

அதனை பார்த்து பிரிட்டிஷார் சந்தோஷப்பட்டனர். ஆனால், நேதாஜி ஒருபக்கம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். 1946ஆம் ஆண்டு ஆங்கிலேயே கடற்படையில் பணியாற்றிய வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என உணர்ந்து அவர்கள் வெளியேற நினைத்தனர். அடுத்த 15 மாதங்களில் நாட்டை விட்டு அவர்கள் வெளியேறினர்.” என்றார்.

“1942 ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அல்ல; நேதாஜிதான்” எனவும் ஆளுநர் கூறினார்.

மேலும், வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும் எனவும், நேதாஜியின் சுதந்திர போராட்டம் குறித்து மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அல்ல; நேதாஜிதான் என ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சென்னை ஆளுநர் மாளிகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி ஆளுநர் மரியாதை செலுத்தினார்.

Share this story