அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
 

O. Panneerselvam condemns the government

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

ஜெயலலிதா ஆட்சி காலத்தில், பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்ற வரிசையில், விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று ஜெயலலிதா வழியில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
 
அதன் அடிப்படையில், விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு, ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க 5.2.2021 அன்று சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டதோடு, அரசாணையும் வெளியிடப்பட்டது. 

அதில், 2021-22 கல்வியாண்டு முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தில்தான் இணைப்பு பெறவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்தல் முடிந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிகளுக்கான அறிவிப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதில் ஏற்கனவே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் இணைப்பு பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், புதிதாக தொடங்கப்பட்ட ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தின் சார்பில், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி மாற்றம் என்ற வரிசையில் தற்போது ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை மூடும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கியவற்றை எல்லாம் கலைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஒருவேளை ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்ற வேலைகளில் தி.மு.க. ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏழை-எளிய, கிராமப்புற மக்கள் உயர்கல்வி பெற ஏதுவாக, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
*

Share this story