பெண்ணினமே.! ஓட்டுக்கு விலையாக அமைச்சர்களின் சுயமரியாதையைக் கேட்பதா?: திருமலை அய்யாத்துரை கேள்வி..

By 
tmalai

மக்கள் தவறுகளைச் செய்துவிட்டு, ஆட்சியாளர்களைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்? என சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான திருமலை அய்யாத்துரை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துரை வருமாறு:

சென்னையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேததங்களைப் பார்க்கச் சென்றபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நோக்கி ஒரு பெண்மணி, பல்வேறு கேள்விகளை அரைகுறை ஆங்கிலம் கலந்த தமிழில் கேட்டார்; சமூக ஊடகங்கள் தொடர்ந்து அதை ஒளிபரப்பி வந்தன.

அந்தப் பெண்மணி சொன்னது யாருக்கும் புரியவில்லை; பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவரிடம் , அமைச்சர் மா.சுப்பிரமணியன், விளக்கமாகக் கேட்டபோது, தன் வீட்டைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்திருந்ததாகவும் 4 நாட்கள் ஆகியும் தமிழக அரசு சார்பில் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் சற்று கோபமாகவே சொன்னார்.

அதை அமைதியாகக் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்;  

இருந்தாலும், அந்தப் பெண்மணியின் ஆவேசம் அங்கிருந்த அனைவருக்கும் ஒருவித நெருடலை ஏற்படுத்தியது; இருப்பினும் அந்தப் பெண்மணியை, அந்த அளவுக்கு காவல் துறை அதிகாரிகள் அனுமதித்தது தவறுதான்; 

சென்னையில் மழை வெள்ளப்பாதிப்பு என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது; இதற்குக் காரணம் இயற்கை பேரிடர்; வெள்ளம் ஏற்படும் என்று தெரிந்தும் அந்தப் பகுதியை மக்கள் எப்படி தேர்வு செய்யலாம்? மக்கள் தவறுகளைச் செய்துவிட்டு ஆட்சியாளர்களைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்? மழை வெள்ளம் ஏற்பட்டு பாதிக்காத நாடு எங்கே இருக்கிறது? பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரப் படாமல் அரசின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்;

தமிழகத்தில் வெள்ளப் பாதிப்பு என்பது சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே என்பது சற்று ஆறுதலான விஷயமே?

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.6000/= வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்; அதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது; அமைச்சர்களையும் அதிகாரிகளையும் திட்டிய பெண்களும் இந்த உதவித் தொகையை வாங்காமல் விட்டு விடுவார்களா?

அதே நேரம் பொங்கல் பரிசு ரூ.1000/= த்தையும் சேர்த்துக் கொடுக்கவும் முதல்வர் ஆனணயிட்டுள்ளார் ; இந்தப் பணத்தைப் பெறும் ஒவ்வொருவரும் தாங்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அலட்சியம் செய்து பேசியது தவறு என்று உணர வேண்டும்;  ஓட்டுரிமை இருப்பதை வைத்து யாரையும் தங்கள் கொத்தடிமைகள் என்று மக்கள் நினைத்து விடக்கூடாது; அமைச்சர் நினைத்திருந்தால், திட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம்;

திமுக ஆட்சி யாரையும் பழிவாங்கும் ஆட்சியல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். மத்திய அரசிடம் போராடி உதவிகள் பெற்று தமிழக மக்களுக்காக சேவை செய்யும் மனிதாபிமானம் கொண்ட அரசு, திமுக அரசு என்பதை மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனியாவது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் குடும்பங்கள் இருக்கிறது; அவர்களும் செய்திகளை உடனுக்குடன் பார்க்கும் வசதி மொபைலில் வந்து விட்டது; அமைச்சர்களை பெண்கள் திட்டுவதை , அமைச்சர் வீட்டில் உள்ளவர்களும் ஊடகங்கள் மூலம் பார்த்துக் கொண்டு இருப்பதை பெண்கள் உணர வேண்டும்; உங்களைப் போல் அவர்களுக்கும் கோபம் வருமா? வராதா? இதனால் பொறுப்பில் உள்ளவர்கள் தினமும் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக நேரிடும்; அவர்கள் நிம்மதி இழந்தால் மக்களுக்கு சேவை செய்வதில் தடைகள் ஏற்படும்;  

எனவே, பொதுமக்கள் முதலில் அமைச்சர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; அவர்கள் வேறு கிரகத்து மனிதர்கள் அல்ல; நம்மோடு வாழ்ந்து வரும் தமிழர்களே; அவர்களை அலட்சியப்படுத்துவது, தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் தமிழ் நாட்டையும் அலட்சியம் செய்வதற்குச் சமம்.  

திமுக வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை; இனியும் அது நடக்காதவாறு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அமைச்சரை நெருங்க விடாமல் பாதுகாப்பு வளையம் அமைத்துக்கொள்ள வேண்டும்; இப்போது இப்படி திட்டுகிறவர்கள் நாளை வன்முறையைக் கூட கையில் எடுக்கலாம்; பெண்கள் என்றாலும் அவர்களுக்கும் ஒரு எல்லை உண்டு; தமிழக அரசு இனியாவது இப்படிப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; 

இவ்வாறு சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான திருமலை அய்யாத்துரை தெரிவித்துள்ளார்.
 

Share this story