சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரம் : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

By 
appavu3

சபாநாயர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:

வருகிற 20-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. சலசலப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 மாத காலமாக சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நெல்லை மாவட்டத்திற்கு ஏராளமான சலுகைகள் கிட்டும். நெல்லை மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் என்ன என்பது முதலமைச்சருக்கு தெரியும். இதுவரை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா 1996-ல் தொடங்கப்பட்டது. 2001-ல் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 2006-ல் பணிகளை தொடங்குவதற்கு முன்னர் 10 ஆண்டு காலம் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது. எதிர்க்கட்சியினரே துணைத்தலைவர் இருக்கை விவகாரம் பற்றி பேசாமல் இருக்கும்போது அவர்களை உசுப்பேத்தி விடுகிறீர்கள்.

மகளிருக்கான உரிமை தொகை ரூ. 1,000 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் விரைவில் நல்ல அறிவிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story