ஓபிஎஸ் தாயார் உடல் தகனம் : இறுதிச் சடங்கு நிகழ்வுகள்..

mother4

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95), காலமானார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. 

இது குறித்து சென்னையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு வந்து தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

தாயாரை இழந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயாரின் உடலுக்கு நேற்று காலையில் இருந்தே அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அமமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

திமுக சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி, மகாராஜன் எம்எல்ஏ, தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

அதன் பின்னர், குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்ட ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளின் உடல், வடகரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அங்கு தனது தாயாரின் சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார்.

Share this story