எங்கள் அம்மாவும், எடப்பாடி சும்மாவும் : மருது அழகுராஜ் தெளிவுரை  

By 
marudhu128

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'எடப்பாடியின் தலைமை, தொடர்ந்து எட்டுத் தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்திந்திருக்கிறது என்று தொண்டர்கள் கோபமுற்றால்.. அதெல்லாம் தவறு.  அவரது தலைமையில்தான் எழுபத்தைந்து தொகுதிகளை கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயித்தது என்று சில அதிமேதாவிகள் ஈயம் பூசப் பார்க்கிறார்கள்.

கூடவே, அம்மாவை ஒப்பிட்டு, எதிர்க்கட்சியாக அவர் வந்தபோதே,  66 சட்டசபை தொகுதிகளில்தான் வென்றார் என்று.. 'எனக்கு பல் இருக்குன்னு ஒத்தைப் பல்லை காட்டுகிற பொக்கை வாயனைப் போல..' அந்த ஒரே பல்லவியை பாடி, தங்கள் பாட்டுடைத் தலைவன் எடப்பாடிக்கு பல்லக்கு தூக்குகிறார்கள்.

புரட்சித்தலைவி தன் ஆட்சிக்காலத்தில் எப்போதும் உள்ளாட்சித் தேர்தல்களில் தோற்றது கிடையாது. இடைத் தேர்தல்களில் எடப்பாடிபோல, கொத்தாக தி.மு.க.விடம் பதிமூன்று தொகுதிகளை பறிகொடுத்ததும் கிடையாது.

ஒன்றில் சரிந்தால், அடுத்ததில் சரிப்படுத்தி தன் நிலையை சமன் செய்து விடுவாரே தவிர, தொடர்ந்து தோற்றுக்கொண்டே வந்து, கடைசியில் கட்டுத் தொகையை காப்பாற்ற  "நான் உங்கள் கண்ணன் குலத்தில் பிறந்தவன்" என்றெல்லாம், "சாதியே  என்னை காப்பாற்று" என கடிதாசி போடுகிற அளவுக்கு அற்பத்தனங்களில் அம்மா ஒருபோதும் இறங்கியது கிடையாது.

அதனால "அவர் அடிச்சு வீழ்த்திய நாலு பேருமே தாதா தான்" என்றெல்லாம் சினிமா வசனங்களைக் கொண்டு, எடப்பாடிக்கு  துதிபாடுபவர்கள். எடப்பாடி பிறரை வீழ்த்திட பயன்படுத்திய ஒரே ஆயுதம் துரோகம் மட்டுமே என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினால் நன்றாக இருக்கும்.

பெரியாரை அண்ணா துரோகத்தால் வீழ்த்தவில்லை. அண்ணாவை கலைஞர் துரோகத்தால் வீழ்த்தவில்லை. கலைஞரை எம்.ஜி.ஆர் துரோகத்தால் வீழ்த்தவில்லை.

எம்.ஜி.ஆரை ஜானகி அம்மா துரோகத்தால் வீழ்த்தவில்லை. அந்த அன்னை ஜானகியை புரட்சித்தலைவி அம்மா துரோகத்தால் வீழ்த்தவில்லை.

ஆனால், தரையில் தவழ்ந்து பதவியை வாங்கிக்கொண்டு பதவி தந்தவரையே நன்றியை மறந்து நாய் என்று விமர்சிப்பதும், நாலரை வருடங்கள் ஆட்சி நடத்த துணையாக இருந்தவரை, தேர்தல் நடத்துவதுபோல் நடித்து தொண்டர்களையும் சேர்த்து ஏமாற்றிவிட்டு, பொதுக்குழுவை வைத்து கட்சியை அபகரித்துக் கொள்ள... புறவாசல் தேடுகிற ஒருவரை மாவீரர் போல சித்தரிக்கப் பார்ப்பது.. எட்டப்பனை கட்டபொம்மனாக காட்டுகிற மோசடி வேலையாகும்.

அதுசரி.. சாணக்கியன் சரித்திரமே நரி சூழ்ச்சி செய்வதுதான் எனும்போது, அந்த சாணக்கியன் பேராலே தொழில் நடத்துவர் எடப்பாடி என்கிற அட்டைக்கத்திக்கு சாணை பிடிப்பது ஆச்சரிமில்லை தானே..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Share this story