மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகளுக்கு தடை.! அண்ணாமலைக்கும் பாஜக தலைமை ஸ்ட்ரிக்ட் உத்தரவு..

By 
kanya1

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்குமேல் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ,இறுதிகட்ட பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வருகிற 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்கிற முடிவு வெளியாகவுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி முடித்து விட்டு இன்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு மாலை 4.35 மணிக்கு வரவுள்ளார்.

தொடர்ந்து மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்கிறார். இதனையடுத்து கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், மோடி தனது தியானத்தின் மூலம் இறுதி கட்ட தேர்தலில் வாக்குகளை கவர திட்டமிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மோடி தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வரும் நிலையில் அவரை வரவேற்க பாஜகவினர் தயார் நிலையில் இருந்தனர். 

ஆனால், பாஜக நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிட பாஜக திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தெரிவித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, கன்னியாகுமரியில் விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share this story