காலம் கடந்த முயற்சியும் எடப்பாடி சூழ்ச்சியும் : மருது அழகுராஜ் தகவல்

'திமுக.வின் எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொள்கிற வேலையை, எடப்பாடி செய்வதன் மூலம் தி.மு.க.வுக்கு உதவுவதில் கொடநாடு குற்றவாளி எடப்பாடி உறுதியாக இருக்கிறார்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
உயிர் மட்டுமே சுமந்து அலையும் பொன்னையன் எனும் நடைப்பிணம், போகும் காலத்திலும் கட்சிக்கு பொல்லாங்கு செய்ய பார்க்கிறது.
பா.ஜ.க. இப்போது நடத்துகிற பஞ்சாயத்து, காலம் கடந்து எடுக்கப்படும் முயற்சியாகும். ஆனாலும், கழகத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்கிற அவர்களது நல்லெண்ணம் வரவேற்கப்படக்கூடியது.
கூட்டணி உடையாமலும், தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை சிதறாமலும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பா.ஜ.க.போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை ஓ.பி.எஸ் முன் வைத்தார்கள். அது ஒரு அரசியல் அனுபவமிக்க அவரது மதிநுட்ப நகர்வாகும்.
ஆனால், அதனை பா.ஜ.க. மேலிடத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக கொண்டு சேர்க்க தவறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.
இந்நிலையில் எடப்பாடி தரப்பை பா.ஜ.க. பிரதிநிதிகள் சந்தித்து வந்த உடனேயே பா.ஜ.க.வுக்கு எதிராக பொன்னையன் பேசுவதை பார்த்தால் பா.ஜ.க.விருப்பத்துக்கு எதிராக எடப்பாடி முடிவெடுக்க தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது
எப்படி பார்த்தாலும், திமுக வின் எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொள்கிற வேலையை எடப்பாடி செய்வதன் மூலம் தி.மு.க.வுக்கு உதவுவதில் கொடநாடு குற்றவாளி எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
இதனை எதிர்காலத்தில் அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.