கர்நாடகா ஸ்டோரி உணர்த்தும் மக்கள் சக்தி : மருது அழகுராஜ் செய்'தீ'

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து உணர்த்தியுள்ள அனல் பறக்கும் அறிக்கை வருமாறு :
'கேரள ஸ்டோரியை விட, கர்நாடகா ஸ்டோரி சிறப்பாக இருக்கிறது. ஆம், தருமத்துக்கும் நீதிக்கும் மாறாக பா.ஜ.க. ஆடிய ஆட்டத்துக்கு கர்நாடக மக்கள் தந்திருக்கும் பாடம் இது.
என்னவொன்று, காவிரி ஊற்றெடுக்கும் மண்ணில் எடுக்கப்படும் முடிவுகள் பல்கிப் பெருகும் என்பது வரலாறு. எனவே, உரியவர்கள் உணர்ந்து திருந்துவது உத்தமம்.
பொதுவாக, வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும் எந்த ஒரு கட்சியையும், மக்கள் மதம்-இனம்- மொழி கடந்து தொடர்ந்து ஆதரிப்பார்கள். ஆனால், மதச்சார்பிலான உணர்ச்சி அரசியலையும் அதன் தொடர்ச்சியான வெறுப்பு அரசியலையும் முன்னெடுக்கும் ஒரு கட்சி விரைந்து வெறுப்பை சம்பாதிக்கும் என்பது நிச்சயம். இதனை கர்நாடகத்து மக்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில், பா.ஜ.க. வீழ்த்தவே முடியாத கட்சி அல்ல. அதுபோல, காங்கிரஸ் மீளவே இயலாத இயக்கமல்ல. இதனை கர்நாடக தேர்தல் காட்சிப்படுத்தியிருக்கிறது.
இனி வரப்போகும் பல்வேறு மாநில தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு தொடர் எழுச்சியை தரலாம். வெற்றியை விசாலமாக்கும் உத்வேகத்தை அது பெறலாம்.
பா.ஜ.க.வும் தன்னை சுய பரிசோதனை செய்துகொண்டு, மறு மீட்சியை மறு மலர்ச்சியை பெற்றிட புதுமுயற்சி செய்யலாம். அது புது வேகமும் பெறலாம்.
அதற்கு, எஞ்சிய மத்திய ஆட்சியின் ஓராண்டு காலம், எச்சரிக்கை உணர்வு தந்து மோடியை மூன்றாம் முறையாக பிரதமராக்கும் பிரயத்தனத்தில் பெருவெற்றியும் பெறலாம். அல்லது ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கலாம்.
எது எப்படி ஆயினும்.. ஒன்று மட்டும் உறுதி, இந்த நாட்டின் ஜனநாயகம் ஆதிக்கம் கண்டு அடங்கிப் போகாது. ஆணவப்போக்குக்கு அடி பணியாது.
மகுடங்கள் தரிக்கும் தலைகளை மக்கள் சக்தி மட்டுமே தீர்மானிக்கும். இதனை பொன்னி நதியின் பிறப்பிடம் புரிய வைத்திருக்கிறது.'
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.