அகமதாபாத்தில் ஓட்டு போட்டுவிட்டு, கண் தெரியாத சிறுமியுடன் பேசிய மோடி..

By 
agam7

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் தொகுதியில் வாக்கு செலுத்திய பிரதமர் மோடி, வெளியில் நின்றிருந்த ஒரு கண் தெரியாத சிறுமியிடம் உரையாடி, அவருக்கு ஆசி கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 3வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கு செலுத்தினார்.

மோடி வாக்களிக்க வரும்போது சாலையில் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வந்த மோடி, தனது கையை உயர்த்தி வாக்கு செலுத்தியதற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ஜனநாயகத் திருவிழாவாக நடைபெறும் இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் அதிக அளவில் வந்து வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் மோடி பாராட்டினார்.

முன்னதாக, கூட்டத்தினரை நோக்கி கை அசைத்த மோடி கண் தெரியாத சிறுமி ஒருவர் தன்னை அழைப்பதைப் பார்த்து அருகில் சென்றார். பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்கும் எஸ்.பி.ஜி. குழுவினர் பிரதமரைத் தடுக்க முயன்றபோதும், அவர்களை விலகி இருக்கச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணுடன் பேசினார்.

இந்தச் சந்திப்பின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. மோடி சந்தித்த இளம்பெண் இரண்டு கண்ணும் தெரியாதவர் என்று அருகில் உள்ள மற்றொரு பெண்மணி சொல்வதை வீடியோவில் காணமுடிகிறது.

பார்வைத்திறன் மாற்றுத் திறனாளியான அந்தப் பெண் தேர்தலில் பாஜகவுக்காக தான் பிரச்சாரம் செய்திருப்பதாகக் கூறுவதையும் அதைக் கேட்டு மகிழ்ந்த மோடி, பெண்ணின் தலையை வருடி ஆசி வழங்கினார். மோடி வாக்களிக்க வந்தபோது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவருடன் இருந்தார்.

Share this story