பிரதமர் மோடி தமிழகம் வருகை.. நிகழ்வுகள் விவரம்..

By 
safe3

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை திருச்சி வருகிறார். திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

மேலும்  திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார். திருச்சி வர உள்ள பிரதமர் மோடியை, ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

திருச்சியில் விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வித் துறைகள் தொடர்பான ரூ.19,850 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்காக நாளை காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் மோடி காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். 

அங்கிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் மோடி ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் 33 பேருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். 

அங்கிருந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்லும் அவர், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். இதை தொடர்ந்து பிரம்மாண்ட விழாவில் விமானநிலைய புதிய முனையம், திருச்சி என்.ஐ.டியில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதி மற்றும் பல ரயில் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி லட்சத்தீவு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் விழாவில், பிரதமர் 1150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். வேகமான மற்றும் நம்பகமான இணைய சேவைகள், டெலிமெடிசின், இ-கவர்னன்ஸ், கல்வி முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் கரன்சி பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றுக்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். 

Share this story