அரசியல் சதுரங்கம் : மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..

meet4

கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கவும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
 

Share this story