அரசியல் சதுரங்கம் : பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்..
 

By 
thamarai2

பாரதிய ஜனதா கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டதால், பாரதிய ஜனதாவுக்கு தூதுவிட்டு நம்முடைய ஆதரவை தெரிவிக்கலாமா? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம்  விவாதிக்க உள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் அணியின் மூத்த நிர்வாகி கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியை அழைத்திருந்தனர். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை அறிவித்து விட்டார்.

இந்த சூழலில் பாரதிய ஜனதா எங்கள் ஆதரவை கேட்கும் பட்சத்தில் ஆதரவு கொடுப்பதுதான் சரியான யுக்தியாக இருக்கும். எனவே அதுகுறித்து விவாதிக்க இருக்கிறோம். அ.தி.மு.க. தொடர்பான மெயின் வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில் இப்போது பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்க என்ன வழி உள்ளது என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறோம்.

இது சம்பந்தமாக தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கலாமா? என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் கமிஷனில் மறுபடியும் மனு கொடுத்தால், இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கக் கூடிய சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்  பேட்டி அளிக்க உள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு மேலும் அதிகமாகி உள்ளது.




 

Share this story