தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாற்றியமைப்பு..

By 
otot

தெலங்கானாவில் இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பதற்றமான 13 தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மீதமுள்ள 106 தொகுதிகளுக்கு மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 51.89 சதவீத வாக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளன.

மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. பிஆர்எஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான சிபிஐக்கு வழங்கி உள்ளது. பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், பாஜக 111 தொகுதிகளிலும், ஜன சேனா 8 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன.

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களை அம்மாநிலம் சந்தித்துள்ளது. இரண்டிலுமே கேசிஆரின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. இந்த முறை கேசிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களில் மற்ற 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் வருக்கிற டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஐந்து மாநிலத் தேர்தலும் முடிவடைந்துள்ளதால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அக்டோபர் 31ஆம் தேதி உத்தரவின்படி, மிசோரம், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நவம்பர் 7ஆம் தேதி காலை 7 மணி முதல் தெலங்கானா மாநிலத் தேர்தல் முடிவடையும் நவம்பர் 30ஆம் தேதி (இன்று) மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த காலக்கெடு ஒரு மணி நேரம் முன்னதாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவுள்ளன.

Share this story