சேலம் பொதுக்கூட்டத்தில் கண்கலங்கிய பிரதமர் மோடி.. 

By 
selam4

ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் முதல்கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடு முடிந்ததை தொடர்ந்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்..

குறிப்பாக பிரதமர் மோடி பாஜக சார்பில் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் வாகன பேரணி நடத்திய மோடி இன்று சேலத்தில் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பாரத மாதாவுக்கு வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர்,

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கிடைத்து வரும் வரவேற்பை நாடு முழுவதும் பார்த்து கொண்டிருக்கிறார். இந்த வரவேற்பால் திமுக தூக்கத்தை தொலைத்துவிட்டது. 

ஏப்ரல் 19-ம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்கு  என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். வெற்றி எண்ணிக்கை 400-ஐ தாண்டும் என்பதே இலக்கு” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ சேலத்தில் நான் இருக்கும் போது எனக்கு நெருங்கியவர்கள், நண்பர்களை நினைவு கூருகிறேன். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக தொடக்க காலத்தில் பாடுபட்ட மிக அற்புதமான மனிதர், கே.எஸ். லக்ஷ்மணன். எமர்ஜென்ஸி காலத்தில் கூட அவர் பல தடைகளை தாண்டி கட்சிக்காக பாடுபட்டவர்.

இன்றைக்கு நான் சேலத்தில் கால் பதித்ததும் அதிகமாக உலுக்கியது சேலம் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் நினைவு. கட்சிக்காக தன் உயிரை தியாகம் செய்த அந்த மாபெரும் மனிதரை நினைவு கூருவோம். கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்த ரமேஷை கொலை செய்து விட்டார்கள் சமூக துரோகிகள். அந்த நேர்மையான மனிதரை இந்த மண்ணிலே நினைத்து இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்துகிறேன்..

அனைவரும் எழுந்து நின்று கட்சிக்காக உயிர் நீத்த அந்த மாபெரும் மனிதர் ரமேஷை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள்” என்று நா தழுதழுக்க பிரதமர் மோடி பேசினார். அதன்படி சேலம் மேடையில் ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Share this story